கம்யூனிஸ்ட் நாடுகளை இரும்புத்திரை நாடுகள் என்று சொல்வார்கள். ஆனாலும், அந்த நாடுகளில் மனித உரிமைகள் மீறப்படுவதாக அடிக்கடி பல நிகழ்ச்சிகளை வெளியிடுவார்கள். சோவியத் ரஷ்யாவிலும், வடகொரியாவிலும், சீனாவிலும் அரசுக்கு எதிரானவர்களை கொன்று குவிப்பதாக அமெரிக்கா உள்ளிட்ட முதலாளித்துவ நாடுகள் குற்றம்சாட்டுவது வழக்கம்.
பிரிட்டிஷார் ஆட்சியில்கூட கைது செய் வதும், தண்டனை விதிப்பதும் வெளிப்படைத் தன்மையுடன் இருந்தது. சிறையில் அடைக்கப்படும் தலைவர்களைக்கூட வழக்கறிஞர்களும் அவர்களுடைய சகாக்களும் சந்திக்க அனுமதிக்கப்பட்டனர். ஆனால், முழு சுதந்திரம் அடைந்துவிட்டதாக கூறப் படும் இந்தியாவில், சொந்த மக்களை அடக்கி ஒடுக்கி அச்சுறுத்தும் நிலை நீடிப்பதாக எதிர்க்கட்சிகள் நீண்ட காலமாக கூறி வருகின்றன. அத்தகைய அடக்குமுறைக்கு சமீபத்திய உதாரணம் காஷ்மீர் என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். ஆம், காஷ்மீரின் உண்மை நிலையை அறிவதற்காக ராகுல் தலைமையில் சென்ற 12 தலைவர்கள் விமான நிலையத்திலேயே தடுத்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
ஆகஸ்ட் 5-ஆம் தேதி ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு இந்திய அரசியல் சட்டம் வழங்கியிருந்த சிறப்பு அந்தஸ்தை பா.ஜ.க. அரசு ரத்து செய்தது. அதுமட்டுமின்றி, அந்த மாநிலத்தை ஜம்மு -காஷ்மீர் மற்றும் லடாக் என்ற இரு யூனியன் பிரதேசங்களாக பிரித்தும் அறிவித்தது. இதையடுத்து, கடந்த 20 நாட்களாக ஜம்மு- காஷ்மீரில் என்ன நடக்கிறது என்றே வெளியுலகிற்கு தெரியவில்லை. அங்கு ஊரடங்கு உத்தரவு நீடிக்கிறது. நான்குபேர் சேர்ந்து வெளியே வரமுடியாது. டெலிபோன் சேவையும், இணைய சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
20 நாட்களுக்கு மேலாக, காஷ்மீர் மாநிலத் தின் முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெஹ்பூபா முப்தி ஆகியோரும், சி.பி.எம். எம்.எல்.ஏ. தாரிகாமி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களும் என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லை. உள்ளூர் வெளியூர் மீடியாக் களுக்கும் அனுமதி இல்லை. ஏராளமானோரைக் காணவில்லை என்ற புகார்கள் ஒருபுறம். ஆனால், நிலைமை சுமுகமாக இருப்பதாக மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் கூறியதுடன், நேரில் வந்து பார்க் கட்டும் என ராகுல்காந்திக்கு சவால் விடுத்தார். லேண்ட்லைன் போன்களுக்கு சில பகுதிகளில் இணைப்புக் கொடுக்கப்பட்டி ருப்பதாகவும், தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் கணிசமாக திறக்கப்பட்டிருப்பதாகவும் கவர்னர் கூறுகிறார்.
ஆனால், பெரும்பகுதி மக்கள் மொபைல் போன்கள் வைத்திருக்கும் நிலையில் லேண்ட்லைன் இணைப்பு என்பது எவ்வகையிலும் உதவாது என்கிறார்கள். பள்ளிகளுக்கு மாணவர்களை அனுப்ப பெற்றோர் தயாராக இல்லை. சாலைகள் வெறிச்சோடிக் கிடக்கின்றன. பொது வாகனங்கள் இல்லை. சில தனியார் வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது.
சிறைப்பட்டிருக்கிற எதிர்க்கட்சித் தலைவர்களின் நலம் விசாரிக்கவும் சி.பி.எம்., சி.பி.ஐ. பொதுச்செயலாளர்கள் யெச்சூரி, டி.ராஜா ஆகியோர் காஷ்மீருக்கு பயணம் செய்தனர். ஆனால், அவர்களை அரசு தடுத்து திருப்பி அனுப்பியது. இதை ராகுல்காந்தி கடுமையாக விமர்சனம் செய்தார். காஷ்மீரில் கொடூரமான ஜனநாயகப் படுகொலையை பா.ஜ.க. அரசு நடத்துவதாக அவர் கூறினார். இதற்கு பதிலளித்த மாநில ஆளுநர் மாலிக், "காஷ்மீரில் எல்லாம் சுமுகமாக இருக்கிறது. வேண்டுமானால், அரசு விமானத்தை அனுப்புவதாகவும், அதில் ராகுல் காஷ்மீர் வந்து பார்க்கலாம்' என்றும் கூறினார்.
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை அனைத்து மக்களும் ஆதரிப்ப தாக அரசு கூறுகிறது. ஆனால், அமெரிக்காவில் வாழும் காஷ்மீர் பண்டிட்டுகள் மட்டுமே ஆதரித்து பேரணி நடத்தியிருக்கிறார்கள். உள்ளூர் மக்கள் காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீடிக்கவேண்டும் என்றே கோரிக்கை விடுக்கின்றனர். காஷ்மீரில் நடக்கும் மர்மங்கள் வெளிப்படையாக தெரியாவிட்டாலும், மனசாட்சி உள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரி கண்ணன் கோபிநாத் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு கேரளாவுக்கு திரும்பியிருக்கிறார். "காஷ்மீருக்கு தடை விதித்தபோது என்ன செய்தீர்கள் என்று என்னை யாரேனும் கேட்டால், எனது வேலையை ராஜினாமா செய்தேன் என்று கூறிக்கொள்ள முடியும்' என்று அவர் கூறி யிருக்கிறார்.
இந்நிலையில்தான், ராகுல் தலைமையில் யெச்சூரி, டி.ராஜா, திருச்சி சிவா, சரத்யாதவ், குலாம்நபி ஆசாத் உள்ளிட்ட 12 கட்சிகளின் தலைவர்கள் காஷ்மீருக்கு பயணம் செய்தனர். ஆனால், அவர்கள் விமான நிலையத்தின் வி.ஐ.பி. லாஞ்சிலேயே தடுத்து திருப்பி அனுப்பப்பட்டனர். குழுவில் சென்ற தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா, “""குழுவினரை மொத்தமாகக்கூட அனுப்ப வேண்டாம்... தனித்தனியாக அனுப்பினாலும் சரிதான். நாங்கள் மக்களை சந்திக்கத்தான் விரும்புகிறோம் என்று கூறினோம். ஆனால் அதற்கும் அனுமதி கொடுக்கவில்லை.
தடுக்கப்பட்ட இடத்திலிருந்தபடியே ராகுல்காந்தி ஒரு லைவ் வீடியோ ஒளிபரப்பினார். அதில், “என்னை ஆளுநர்தான் அழைத்தார். அவர் அழைப்பை ஏற்று இதோ நான் வந்திருக்கிறேன். ஆனால், என்னை வெளியே விட மறுக்கிறார்கள். எல்லாம் சுமுகமாக இருக்கிறது என்றால் ஏன் வெளியே விட மறுக்கிறார்கள்? ஏதேனும் ஒரு பகுதியில் ஐந்து, பத்து அல்லது 15 பேரை சந்தித்துப் பேசவே விரும்புகிறோம்'' என்றார்.
இந்நிலையில்தான்... காஷ்மீரில் மீடியாக் களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் இந்திய பத்திரிகை கவுன்சிலும் வழக்குத் தொடுத்துள்ளது. தனது சவாலில் காஷ்மீர் ஆளுநர் சறுக்கிய நிலையில், அனுமதி மறுக்கப்பட்டதன் விளைவாக உண்மை நிலையை அம்பலப்படுத்தியுள்ளனர் எதிர்க்கட்சித் தலைவர்கள்.
-ஆதனூர் சோழன்